பசும்பொன் பயணம் – திரு. ஜெயமோகன், எழுத்தாளர்

May 23 2010No Commented

Categorized Under: வரலாறு

ஒரு தொன்மம் அல்லது ஆசாரம் அல்லது திருவிழா எப்படி உருவாகி வலுப்பெறுகிறது என்பதற்கான சமீபகால உதாரணம் பசும்பொன் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா……..

….தேவர் சமாதி ஒரு கோயில் போல் இருக்கிறது. தேவர் துறவியாக இருந்தவராதலால் சைவ முறைப்படி சமாதியிடத்தில் ஆலயம் கட்டி வழிபட்டு வருகிறார்கள். நம்ப முடியாத அளவுக்கு கூட்டம். அலையலையாக . கைகூப்பியபடி கண்ணீர் கசிய பரவச நிலையில் வயதான பாட்டிகள் எல்லாம் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த உணர்ச்சிவேகம் அங்கே எங்கும் நிறைந்திருந்தது. அந்த நீள்வரிசையை தாண்டி உள்ளே போக முடியும் என்றே படவில்லை. நாங்கள் திருமணத்துக்கு திரும்பி வரவேண்டும். ஆகவே இன்னொருநாள் கூட்டமில்லாத அன்று வரலாம் என்று திரும்பிவிட்டோம்….

….எந்த ஒரு மக்கள்கூடுகையும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குச் சாதகமானதே. தேவர்சாதியை அரசியல் பிரக்ஞைக்கு கொண்டுவந்தவர் என்ற முறையிலும் அவர்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சுயநலமில்லாது போராடியவர் என்ற முறையிலும் அம்மக்கள் முத்துராமலிங்கத்தேவர் மீது கொண்டிருக்கும் பெரும் பற்று மரியாதைக்குரியது

ஆனால் தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை….

மதுரை ஆலயத்தில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தவர் தேவர் என்பது வரலாறு. அந்த வரலாறு அந்த இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் அவர்களில் ஒருசிலர் கிளப்பிய சில வெறிகொண்ட வெறுப்புக்கோஷங்களை எழுப்பியிருக்கமாட்டார்கள்.

க.சந்தானம், தி.செ.சௌ.ராஜன், சட்டநாதக் கரையாளர் போன்ற பலருடைய வாழ்க்கை வரலாறுகளில் தேவர் குறிப்பிடப்படுகிறார். உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது. ஒரு தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று சாலைகள் தென்பட்ட பீதி ஒரு நல்ல விஷயம் அல்ல. தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.

தன்னிச்சையாக ஆரம்பித்த ஒரு விழா மெல்ல மெல்ல ஒரு திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி வரவேண்டும்.

ஆகவே தேவர் சாதியினர் தங்களை திரட்டிக்கொள்வதை நான் எதிர்மறையானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் தங்களை ஜனநாயக அமைப்புக்குள் முன்னேற்றிக்கொள்ள இன்று சாத்தியமான ஒரு வழி என்றே அதை காண்கிறேன். இன்று அவர்களின் சமூகத்திற்குள் இருக்கும் பல்வேறு எதிர்மறைக்கூறுகளை அதன் மூலம் அவர்கள் களைந்துகொள்ள முடியும். உள்முரண்களை தீர்த்துக்கொள்ள முடியும். அதன்மூலம் அவர்கள் பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற முடியும். அது அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் நல்லதே.

……..ஆனால் இதற்குச் சில வழிமுறைகள் உள்ளன. ஜனநாயகம் அந்தவழிகளை மட்டுமே வழங்குகிறது. அந்த கரைகளை மீறுவார்கள் என்றால் அதன் அழிவுகள் அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்ச்சமூகத்திற்கேதான் என்றுதான் நான் நினைக்கிறேன். பலவகையிலும் தேவர்சமூகத்திற்குச் சமானமானது நாயர் சமூகம். தேவரையும் வேளாளர்களையும் இணைத்தால் உருவாகும் சமூகம் என அதைச் சொல்லலாம். அதாவது போர்த்தொழிலும் அதற்கான மனநிலைகளும் பண்பாடும் உண்டு. அதேசமயம் வேளாளர்களைப்போல நில உடைமையும் ஆட்சியதிகாரமும் மத அதிகாரமும் கல்வியும் உண்டு.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாயர் சமூகம் இன்றைய தேவர் சமூகம் எதிர்கொள்ளும் பெரும்பாலும் எல்லா வகையான சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருந்தது. ஒன்று, மிதமிஞ்சிய சுயபெருமிதம். ஆட்சியாளர்களே தாங்கள்தான் என்ற எண்ணம். இரண்டு, ஏராளமான உட்பிரிவுகளும் அவர்களுக்குள் மோதலும். மூன்று, இயல்பாகவே ரத்தத்தில் இருந்த வன்முறைப்போக்கும் அதன் விளைவான வெட்டிச்சண்டைகளும் வம்பு வழக்குகளும்.

……..மூன்று முக்கியமான குறைபாடுகளைக் கண்டேன். ஒன்று தேவர்களின் உட்பிரிவுகளுக்கு இடையே இன்றும்கூட சரியான புரிந்துணர்வு இல்லை. இரண்டு, அந்தச் சாதி இன்னமும் ஓர் அமைப்பாக திரளவில்லை. ஆகவே எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை.

…….அவரது ஒளிமிக்க ஆளுமைப்பக்கத்தை வைத்து அவரைக் கட்டமைத்துக்கொள்வதே அச்சாதிக்கு நல்லது.
தேவர்கள் தங்களை உறுதியான இலக்குள்ள அமைப்பாக ஆக்கிக்கொண்டு, சகசாதிகளுடன் இயல்பாக இணைந்துபோய், தங்களுடைய கல்வி மற்றும் தொழில் நலன்களுக்காக சீராக போராடுவார்கள் என்றால் இந்தச் சாதியடையாளம் அவர்களுக்கு ஓர் எல்லை வரை நன்மைபயக்கக் கூடும். இன்றைய கட்டற்ற போக்கையும் சகஜாதிகள் மேல் வெறுப்பையும் அவர்கள் முன்னெடுத்தால் இழப்பு அவர்களுக்கே. தேவர்கள் அல்ல, எவர் நினைத்தாலும் சமூக மாற்றத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அது காலவெள்ளம்.

தேங்கியவர்கள் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள் என்பதே சமூக இயங்கியலின் விதியாகும்.

ஜெ

மேலும்…..

இன்னும் கொஞ்ச நளில் காமராஜரைப் பற்றியும் இதேபோன்ற வரலாற்றுச் சந்தேகங்கள் எழும் என நினைக்கிறேன். தலைவர்களை சாதிச்சிறைக்குள் அடைக்கும் முயற்சியின் விளைவு. நான் அம்பேத்காரைப் பற்றி எழுதியபோதும் இதை எதிர்கொண்டேன். அவர் தலித்துக்களின் தலைவர் என்பதற்கு மேல் அவரது பங்களிப்பு குறித்து எவருக்குமே தெரியவில்லை.

முத்துராமலிங்கத் தேவர் மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர். அன்று அவரது சாதியைச்சேர்ந்த மக்கள் மீதிருந்த கொடுமையான குற்ற பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக போராடியபடித்தான் அவரது அரசியல் முக்கியத்துவம் உருவாகியது. குற்றபரம்பரைச் சட்டத்தை தீவிரமாக ஆதரித்து மேலும் பரப்ப முயன்ற ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராகவே தேவர் காங்கிரஸில் சேர்ந்தார்.

ஆனால் ஒரு காங்கிரஸ் தலைவராகவும் போராளியாகவும் அவர் தேவர் சதியின் நலன்களுக்காக மட்டுமே போராடுபவரக இருக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் தென்னாட்டில் காங்கிரஸே அவரை நம்பித்தான் இருந்தது. அவர் காங்கிரஸின் எல்லா போராட்டங்களிலும் முன்னணி போராளியாக இருந்திருக்கிறார். அதேசமயம் காங்கிரஸில் பிளவுகள் உருவாகும் நேரங்களில் பலமுறை பதவிகளை துறந்து சமரசம் செய்துகொண்டுமிருக்கிறார். நாம் வரலற்றில் காணும் தேவர் பதவி மோகம் இல்லாத தீவிரமான் ஊழியர்

அவர் தன்னளவில் சாதி வெறிக்கு அப்பாற்பட்டவரகவே இருந்தார் என்பதற்கு பல ஆதர்ங்கள் உள்ளன. அவரே ஆலயப்பிரவேச போராட்டத்தை நடத்தியிருக்கிறார். பள்ளர்கள் பறையர்கள் உள்ளிட்ட பிற சதியினரை ஒருங்கிணைக்க களப்பணி ஆற்றியிருக்கிறார். அவரைப்பற்றிய்ய காங்கிரஸ் பதிவுகள் எல்லாமே அவரை ஒரு அயராத போராளியாகவே சித்தரிக்கின்றன. அவரது எதிரியான ராஜாஜியின் குறிப்புகள் கூட அவரது அரசியல் தவரு அவர் ஃபார்வர்டு பிளக்குக்குச் சென்றது . அது அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதை அன்று எவரும் ஊகித்திருக்க முடியாது. சுபாஷ் நட்டை விட்டு ஓடியதுடன் இந்தியாவில் ஃபார்வர்டு பிளாக் உறைந்துவிட்டது

தேவர் காந்தியை ஏற்கவில்லை, காரணம் அவரது மனம் அகிம்சை போராட்டத்தை நம்பவில்லை. ஆனல் அவர் காங்கிரஸில் இருந்த நாள் வரை காந்தியின் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்

முதுகுளத்தூர் நிகழ்ச்சி குறித்தெல்லாம் விரிவாகவே எழுதவேண்டும். ஆனல் ஒன்றை மட்டும் கவனிக்க வேண்டும். பல்வேறு தனிச்சதிகளான தேவர்கள் ஒன்றாக அனது பிரிட்ட்ஷ் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலமே. அவரக்ளுக்கிடையே இன்றுகூட ஒருங்கிணைப்பு இல்லை. அப்படியானால் ஐம்பதுகளில் என்ன நிலை நிலவியிருக்கும்? தேவர் தன் சாதியையும் தேவர் சாதிக்குழுக்களையும் முழுக்க கட்டுப்படுத்தும் நிலையில் எப்போதுமே இருந்ததில்லை.

தேவருக்கு இருக்கும் கடவுள் பிம்பம் கடந்த இருபது வருடங்களில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்.

ஜெ

February 10, 2010 – 12:23 am

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் பசும்பொன் பயணம் பற்றிய நிகழ்வுகளை கட்டுரையாய் படித்தேன்.  ஒரு இலக்கியவாதியாக, ஒரு பயணாளியாக தங்கள்  கருத்துக்கள் மிகவும் சரியாகத் தோன்றியது.  கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அங்கு சென்று வருகிறேன். இந்த தமிழ் மண்ணின் வீரிய மைந்தனைப் பற்றிய தேடுதலோடு அவரைப் பற்றிய நூல்களை,  செய்திகளை கடந்த பதினோரு ஆண்டுகளாக சேகரித்தும் வருகிறேன்.  சாதி பார்ப்பது அரசியலுக்கும் இல்லை ஆன்மீகத்திற்கும் இல்லை என்ற தேசியமும் தெய்வீகமும் பேசி அதை செயலில் காட்டிய மிகப் பெரிய தேசியவாதி அவர்.  இரண்டையும் சரியாகப் பொருத்தி அதில் வெற்றியும் பெற்றவர். வெறும் அரசியல் பிழைப்புவாதிகளால் ஜாதிச் சாயம்  பூசப்பட்டார்.  இருப்பினும் வேறெவருக்கும் இல்லாத தனித்தன்மையுடன் அனைவராலும், இலட்சக்கணக்கில் மக்களாலும் அஞ்சலி செலுத்தப்படுவது இன்று  இவருக்கு மட்டுமே.  ஜாதி வோட்டுக்கு எற  சொல்லப்படுவதெல்லாம் வெறும் பேச்சு மட்டும் தான்.  யார் வந்தாலும் வராவிட்டாலும் காசு கிடைத்தால் தான் ஓட்டு என்பது வெளிப்படை….

உங்களின்  சில புரிதல்களில் ‘‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது.’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.  தேசியம் வெறும் குப்பை, தனி தமிழ் என்பதே எங்கள் குறிக்கோள் என்று ‘இன்று’ வரை புலம்பும் அரசியல் கூத்தாடிகளுக்கும், அறிவிற்கும் பகுத்தறிவிற்கும் இவர்கள் தான் மொத்தக் குத்தகை எடுத்தது போல நாத்திகம் பேசும் நேற்று முளைத்த காளான் குடைகளின் கீழ் இருப்போர்க்கும், ஏக  போக விளம்பரமும் பரப்புரையும் உள்ள இன்றைய தமிழகத்தில், அதன் ஆட்சியின் தலைமை பொறுப்பினை இழந்த இக்குடியினர் எவ்வாறு இதை (புரிந்திருப்பினும்) வெளிக்கொணர்வர்(!!!). நீங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும்படி அவர்கள் செயல்புரிவதும் உண்மையில் ஐயமே.

மேலும் ‘இன்றும் தமிழகக் காடுகளைக் காப்பது சீமைக்கருவேலமே’ என்று சொல்லி இருந்தீர்கள். உங்களுக்கு மேலும் ஒரு உண்மை தெரிந்திருக்க வேண்டும். அது என்னவென்றால் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இக்காடுகள் அதிகம் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான். அருகிலுள்ள விருது(பட்டி)நகரில் இது அதிகமில்லை. மேலும் நீரின்றி விளையும் மரம் இது, காற்றின் ஈரப்பதம் கூட இதற்குப் போதும் தளைப்பதற்கு வாழை போல்(!?) பெருகுவதற்கு, இது இருக்கும் இடத்தில வேறெதுவும் விளையாது, விளைய விடாது. காலம் காலமாய் வீரத்தை பறைசாற்றி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, தமிழகத்தில் மிகப் பெரிய கண்மாய்களையும், மடைகளையும், புதிய நீர் வழிகளையும் ஏற்படுத்தி விவசாயம் செய்த இன்றைய முகவை பற்றி அங்கே இருப்போர்க்கும், சென்று ஆய்வுக் கண் கொண்டு நுகர்வோர்க்கும் மட்டுமே புரியும். ஏனையோர்க்கு வெறும் வாய் வழிப் பேச்சு தான் முக்கிய கூறு, வேறு திக்கில்லை.

நான் முகவை மாவட்டத்தை சேர்ந்தவன்.  இருபது வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் அறுபது மாடுகள் இரண்டு மாட்டுவண்டி ஜோடிகள் என ஒரு பெரிய மந்தைக் கூட்டமே இருந்தது. ஆனால் இன்று மருந்துக்கு ஒரே ஒரு பசு மாடு மட்டும் இருக்கிது..  இதற்கு மேய்ச்சல் நிலம் அழிந்து போனதும் அதற்கு இக்கருவேல் மரங்கள் பெருகியதும் தான் மிக முக்கியக் காரணம். திட்டமிடப்பட்ட அரசியல் காரணங்களும் பல உள்ளன.  இராமேஸ்வரத்திலிருந்து இராமநாதபுரம் கீழக்கரை வேம்பார் வழியாக குறுக்கு சாலை மற்றும் தூத்துக்குடி வழியாக செல்ல வேண்டிய இருப்புப்பாதை தடை செய்யப்பட்டு, எவ்வித அடிப்படை பொதுப்பயன் இன்றி மானாமதுரையில் இருந்து அருப்புகோட்டை சென்று அங்கிருந்து விருதுநகருக்கு இருப்புப்பாதை போடப்பட்டது. தமிழத்தில் எல்லா ஊர்களிலும் தீண்டாமை அழிந்து போய் முதுகுளத்தூரில் மட்டும் அது கும்மி அடிதது ஆடுவது போல அங்கு மட்டும் (கவனிக்க: அங்கு மட்டும்) மண்ணின் மைந்தர்களாம் மறவர்களுக்கும் பள்ளர்,பறையர்களுக்கும் சண்டை மூட்டப்பட்டது.  இன்றும் வெளிநாட்டிற்கு செல்வோர் அதிகம் இம்மாவட்டத்தில் தான். வேறு மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்வதிலும் இம்மாவட்டதினர் தான் முதலிடம். உயர்ந்தது  தாளும் என்பதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு இன்றைய முகவை மாவட்டம் என்று சொல்வது சாலப் பொருத்தமாகும்.

மேலும் ‘அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை’ என்று குறிப்பிட்டுருந்தீர்கள்.  நீங்கள் நினைவ்டத்தின் உள்ளே செல்லவில்லை என்று நினைக்கிறேன். அங்கு தமிழக அரசின் சார்பில் பசும்பொன் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் புகைப்படக் கண்காட்சி உள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் அய்யாவினை பற்றிய குறைந்தது மூன்று நூல்களாவது அங்கே எனக்கு கிடைக்கும். இம்முறை சுமார் அறுபது தலைப்புகளில் பசும்பொன் அய்யா மற்றும் முக்குலத்தோரின் விடுதலைப் போருக்கான தலைமை பங்களிப்பு பற்றிய நூல்களை விற்பனைக்கு நாங்கள் எடுத்து சென்றோம். குறைந்த நேரத்ல் சில ஆயிரத்திற்கு மேல் நூல்கள் விற்பனை ஆயிற்று.  இத்தனைக்கும் சில நூல்கள் எல்லாம் நானூறு ஐநூறு ரூபாய் விலை உள்ளவை.

எல்லாவற்றிக்கும் மேல் உங்களின் பார்வையிலிருந்து நாங்கள் தெரிந்து கொள்வது இம்முயற்சிகள் பெரிய அளவில் இன்னும் சிறப்பாக செய்யப் படவேண்டும் என்பதே.

நல்லவை நடக்கும் நன்றாய் என்றைக்கும்.

உங்கள் பயணக் கட்டுரையின் தெளிவு எங்களுக்கு பயன்படும். அடுத்த பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவை நடக்க எங்களுக்கு மேலும் உணர்வூட்டும். நன்றிகள் பல உங்களுக்கு. இலக்கியவாதிகளை போற்றும் தமிழ் முறைப்படி உங்களை வரவேற்ப்பதிலும், வணங்குவதிலும் வாழ்த்துவதிலும் பெருமிதம் கொள்கிறோம்.

தனியன் பாண்டியன்.

அன்புள்ள பாண்டியன்

தங்கள் கடிதத்துக்கு நன்றி. பொதுவாக ஒரு சமூகம் தன்னைப்பற்றி என்ன மனப்பிம்பம் கொண்டிருக்கிறது என்பது அதன் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பது என் எண்ணம். கல்வி சார்ந்து வணிகம் சார்ந்து சுய அடையாளம் கொண்ட சாதிகளுக்குரிய யுகம் இது. வீரம் என்றபேரில்  முன்வைக்கப்படும் வன்முறை இக்காலத்தில் காலாவதியான ஒன்று. காலில் இரும்புக்குண்டுபோலக் கனப்பது. நவீன இந்தியாவில் டாக்கூர் ,நாயர்,ரெட்டி போல அத்தகைய பின்புலம் கொண்டிருந்த பலசாதிகள் அவ்வடையாளாத்தை உதறியதன் மூலமே அடுத்த கட்டத்துக்கு வந்தன. இன்று தேவர்களை வீரம் கொண்டவர்கள் என்று சொல்லிச் சொல்லி உசுப்பேற்றும் அரசியல் கட்சிகள் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அச்சாதியின் தலைமையை அவர்களில் உள்ள சான்றோர்கள், அறிஞர்களிடமிருந்து கேடிகள் கைகளுக்கு மாற்றுகிறார்கள். இந்தநிலைக்கு ஒரு மாற்று இன்று மிக அவசியமானது. இதையே நீங்களும் சொல்கிறீர்கள். மகிழ்ச்சி

ஜெ

http://www.jeyamohan.in/?p=6470

Leave a Reply

Security Code: