தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில் மேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ தெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி ஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில் மிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும், ராஜராஜனை பற்றியும் தான் .
தஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம் என்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில் பிரகதீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறது .
தஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை குளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது . கோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை,அகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால் கட்டப்பட்டது .
இக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5 அடுக்குடன் உள்ள முதல வாயில் ” கேரளாந்தகன் திருவாயில் ” எனப்படும் . கி . பி 988 இல் கேரளா மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை வைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .
இரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள “ராஜராஜன் திருவாயில்” ஆகும். மதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று மண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு தளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு தளத்துடன் தற்போது காட்சி தருகிறது. இக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது தவறான செய்தி .
விமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே கருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம் உடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு நான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில் ஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு சாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .
பொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப் பட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின் மேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல் மாலிக்கபூரின் படையெடுப்பின் போது சூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை காண முடியவில்லை .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில் தான் என்பது வரலாற்று உண்மை .